முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை... வயதுக்கு தக்கபடி மாறிவரும் தீபாவளி


ஆயிரங்களை செலவு செய்து தீபாவளி கொண்டாடுபவர்களை விட, அப்பாவிடமோ, தாத்தாவிடமோ அழுது அடம்பிடித்து சில நூறு ரூபாய்களை பெற்று, அதில் வாங்கிய பட்டாசுகள் படபடவென வெடித்து மகிழும் சிறுவர்களின் மகிழ்ச்சியின் அளவு பெரியது.
கொண்டாட்டம் என்பது மனம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. தீபாவளி கொண்டாட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொருவரின் மனநிலையும் வெவ்வேறு விதமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இருக்கும்.
மகிழ்ச்சியான இந்நாளில் மற்றவர் மனநிலை எப்படி என்பதையும் கொஞ்சம் பார்ப்போம்.
2 வயதுக்கு குறைவான குழந்தைகள் தங்களின் பெற்றோர் மத்தாப்பு கொளுத்தி மகிழ்வித்தாலே அவர்களின் முகம் புன்னகை பூக்கும். அப்போது மத்தாப்பு ஜொலிப்பு அழகா? மழலையின் புன்னகை அழகா? என்ற தலைப்பில் பட்டிமன்றமே நடத்தி விடலாம். 2 வயதை கடந்த குழந்தைகள் தாங்களே மத்தாப்பு கொழுத்த விரும்புவர். மத்தாப்பு எவ்வளவு நீளமாய், எவ்வளவு பிரகாசமாய் எரிகிறதோ அந்த அளவுக்கு முகம் மலர்வர். மனமெல்லாம் உலகில் தங்களை போல் மகிழ்ந்தவரில்லை என்ற வகையில் கொண்டாடித் தீர்க்கும்.
6 வயதை கடந்த சிறுவர், சிறுமிகளுக்கு மத்தாப்பை கடந்து பட்டாசு வெடிக்கும் ஆசை பிறக்கும். ஒரு துப்பாக்கியும், அதில் பொருத்தக்கூடிய வெடிச்சுருள்களும் கிடைத்து விட்டால் போதும், பட்,பட்டென சுட்டுக் கொண்டே -ஊரையே வலம் வருவர். அத்துடன் சீனி வெடி, ஓலை வெடியை வெடிக்கவும் மனம் துடிக்கும். திரியில் பற்றவைத்த நெருப்பு பட்டாசை வெடிக்க வைக்கும் ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள் எழும் மகிழ்ச்சி அளவிட முடியாதவை.
10 வயது சிறுவர், சிறுமிகளுக்கு புத்தாடை, பட்டாசு, பலகாரம் இவற்றில் கேட்டவை கிடைத்து விட்டாலே அந்த தீபாவளி சரவெடி தீபாவளி தான். 15 வயதை கடந்தவர்களுக்கு அரும்பு மீசை வெளிப்படும் தருணம். தீபாவளியை கொண்டாட்டமாகவே மட்டும் பார்க்கும் பருவம். அடம் பிடித்தேனும் நினைத்ததை முடிக்கத் துடிக்கும் பருவம். அந்தந்த காலச்சூழலில் எந்த ஆடை பேஷனாக உள்ளதோ அதையே விரும்புவர். பலகாரம் மீது பெரிய விருப்பம் இல்லாத போதிலும், பட்டாசு மீது அதீத பிரியம் கொண்டிருப்பர். பசியை மறந்து பட்டாசு வெடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற மனநிலையோடு, பக்கத்து வீட்டை விட தன் வீட்டு வாசலில் அதிகம் வெடித்துச் சிதறிய பட்டாசு காகிதங்கள் கிடக்க வேண்டும் என்ற மனநிலையும் சேர்ந்து கொள்ளும்.
20 வயதை நெருங்கியவர்கள் எனில் பெரும்பாலும் கல்லூரி காலத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பர். தீபாவளி என்றால் நண்பர்களோடு சேர்ந்து ஒரே மாதிரியான ஆடை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டு இருக்கும். வீட்டில் அடம்பிடித்து அழுதுபுரண்டு பெற்ற காசில், ஒரே மாதிரியான புத்தாடை அணிந்து நண்பர்களோடு வெளியே கெத்தாக உலா வருவது இந்த பருவத்தில் சாதாரணமானது.
25 வயதில் வேலைக்கு செல்பவர்களின் தீபாவளி கொண்டாட்டத்துக்கு உரியதாக இருக்கும் அதே சமயத்தில் படித்து முடித்து வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள் நிலைமை பரிதாபத்துக்கு உரியது. வாங்க நினைத்த புத்தாடையை கூட அணிய முடியாமல், யாரேனும் ஒருவரை சார்ந்தே தீபாவளி கொண்டாட்டம் அமையும். சிறுவயதில் பெற்றோரை சார்ந்து கொண்டாட்டங்கள் இருந்தாலும், கால் நூற்றாண்டு வயதை தொட்டவர்களுக்கு உள்ளுக்குள் ஒரு கர்வம் உருவாவது இயற்கையானதே. அப்படி ஒரு மனநிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு இந்த தீபாவளி மகிழ்வை கொடுப்பது கொஞ்சம் சிரமம் தான்.
திருமணமாகி தலைதீபாவளி கொண்டாடுபவர்களுக்கு இந்த தீபாவளி வாழ்வில் மறக்க முடியாதது. பக்கத்து வீடுகளில் ஜன்னல் கதவுகளையும் சேர்த்து மூடிக் கொள்ளும் அளவுக்கு பட்டாசு கொளுத்தி மகிழ்வார்கள். அதே நேரத்தில் கடந்த ஆண்டு பட்டாசு சத்தம் விண்ணை முட்டும் அளவுக்கு வெடித்து மகிழ்ந்து இந்த ஆண்டு கைக்குழந்தை வைத்திருக்கும் தம்பதிகளுக்கு பட்டாசு என்றாலே கடும் அலர்ஜியாக தான் இருக்கும். சிறு சத்தம் கேட்டாலே தூக்கம் கலைந்துவிடும் குழந்தையை இந்த பட்டாசு சத்தங்களில் இருந்து பாதுகாப்பது பெரும் போராட்டமாகவே இருக்கும். 'கொஞ்சம் தள்ளிப் போய் பட்டாசு வெடிங்களேன்' என பக்கத்து வீட்டு சிறுவர்களிடம் பலரும் கெஞ்சி இருப்பார்கள். இன்றும் கொஞ்சும் நிலையில் பலரும் இருப்பார்கள். குழந்தைப் பருவத்தில் நாம் வெடித்த பட்டாசு மகிழ்வை கொடுத்த போதிலும், நம் குழந்தைகளுக்காக என்று வரும் போது அதே பட்டாசு சத்தம் துயரத்தை கொடுக்கும்.
35 வயதை கடக்கிறது என்றால், அத்தோடு பட்டாசுக்கும் நமக்குமான உறவு கொஞ்சம், கொஞ்சமாக துண்டிக்கப்படுவது இயல்பு. குழந்தைகள் வளர்ந்து வரும் நிலையில், கொண்டாட்டத்தை பிள்ளைகளின் பக்கம் நகர்த்திவிட்டு, அவர்களின் மகிழ்ச்சியை பார்த்து பூரிப்படைகிறார்கள். இப்படியே பிள்ளைகளின் மகிழ்ச்சியை பார்த்தே மகிழக் கற்றுக் கொள்ளும் மனது. 50 வயதை நெருங்கும் வேளையில் தங்களின் பிள்ளைகளுக்கான தலைதீபாவளி பரபரப்பு தொற்றிக் கொள்ளும். பிள்ளைகள், பேரன், பேத்திகளின் கொண்டாட்டங்களை பார்த்தே மனம் நிறைவடையும். பட்டாசுகள் மீது ஆர்வம் குறைந்து இருக்கும். பலகாரங்கள் மீதான ஆசை இருந்தாலும் டாக்டர்களின் கண்டிப்பு கரங்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும்.
60 வயதை கடந்தவர்களுக்கு தீபாவளி எதிர்பார்ப்பு என்பது பட்டாசு மீதோ, பலகாரங்கள் மீதோ, புத்தாடைகள் மீதோ இருக்கப் போவதில்லை. சண்டை சச்சரவு இல்லாமல் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதிலும், பிள்ளைகள் வெளியூர்களில் வசிக்கிறார்கள் எனில், தீபாவளி பண்டிகை காலத்திலாவது பேரன், பேத்திகள் என்று வீடு நிறைய ஆட்கள் நடமாட்டம் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான முதியவர்களின் எதிர்பார்ப்பாக அமையும்.
ஆக, பண்டிகைகளின் மகிழ்ச்சியை பணம் மட்டுமே தீர்மானிப்பதில்லை. மனம் தான் தீர்மானிக்கிறது. மனம் ஒன்ற மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்!

- கதிர்மாயா

குறிப்பு: 2018-ம் ஆண்டு 'தினத்தந்தி' தீபாவளி சிறப்பு மலரில் வெளிவந்த  கட்டுரை
நாள்:- 06-11-2018

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'கோபுரத்தில் இருந்து கோட்டைக்கு குதிக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் முயற்சி' -இயக்குனர் கவுதமன் தாக்கு

கோபுரத்தில் இருந்து கோட்டைக்கு குதிக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் முயற்சி செய்கிறார்கள் என்றும், அன்னை தெரசா போல் சேவை செய்யுங்கள் என்றும் இயக்குனர் கவுதமன் கூறினார். கவுதமன் பேட்டி திரைப்பட இயக்குனர் கவுதமன் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தேனியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ற வாலிபர் தீக்குளித்து இறந்தார். எதற்காக அவர் உயிரை தியாகம் செய்தாரோ அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேறவில்லை. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில், முல்லைப்பெரியாற்றில் புதியஅணை கட்டுவதற்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகம். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கும் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மத்திய அரசு தொடர்ந்து தமிழ் இனத்து...

கடவுள்களை உருவாக்க காரணமானவர்: இவரை உங்களுக்கு தெரியுமா...?

கடவுள்களை உருவா க் க காரணமானவர்:   இவரை உங்களுக்கு தெரியுமா...?       'நீங்கள், கடவுள் மாதிரி சாமி' என்ற வார்த்தைகள் கோவில்களை விட, மருத்துவமனைகளிலும், நீதிமன்றங்களிலும் தான் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. அதேபோல் நன்மை செய்யும் சான்றோர்களின் நற்செயல்களால் பயன்பெற்றவர்கள் வணங்கும் போதும் இந்த வார்த்தையை உச்சரிப்பது உண்டு.     நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி      கடவுள்கள் நேரில் வந்து யாருக்கும் உதவுவது இல்லை. நல்ல மனிதர்களே கடவுள்களாக உருவெடுக்கின்றனர். அந்த வகையில் எண்ணற்ற கடவுள்கள் உருவாக அடித்தளமிட்ட மகானை பற்றி அறிவோம். வாருங்கள்... தேனி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளிக்கு இது நூற்றாண்டு விழா. பிப்ரவரி 14-ந்தேதி தொடங்கி, 17-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விழா நடக்கிறது. ஒரு கல்வி நிலையம் தொடக்கத்தில் இருந்தே பெருமைக்குரியதாக விளங்கி நூற்றாண்டை தொடுவது என்பது அத்தனை சாதாரணமானது அல்ல.     ஏழை, எளிய மக்கள்  கல்வி மறுக்கப்பட்ட கால கட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது என்பது போர்க்களத்தி...

பவனி வரும் பட்டத்துக் காளை! அதிசய சம்பிரதாயங்களும்.. அபூர்வ பழக்கங்களும்..

தே னி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழுவத்தில் 400 மாடுகள் உள்ளன. அவைகளுக்கு தலைவனாக விளங்குவது பட்டத்துக்காளை. அதனை தேர்வு செய்யும் நடைமுறை சுவாரஸ்யமானது. வரலாற்று தொடர்பும் கொண்டது. தேவராவலு என்ற இனத்தை சேர்ந்த காளையே பட்டத்துக்காளையாக தேர்வு செய்யப்படுகிறது. தேவர்+ ஆவலு என்று இதை பிரித்து பொருள் கொள்கிறார்கள். ‘ஆவலு’ என்பது பசுவை குறிக்கிறது. தேவராவலு என்றால் தேவர்களின் பசு என்று பொருள். அந்த வகை பசுக்கள் ஈன்ற கன்றுகளில் இருந்தே பட்டத்துக் காளை தேர்வு செய்யப்படுகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் தானமாகவும் காளைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவை பட்டத்துக் காளைக்கான போட்டியில் இடம்பெற முடியாது. அதனால் அவைகளை அடையாளம் காண, தானமாக கொடுக்கப்படும் மாடுகளின் காதின் ஒரு பக்கம் குறியிடுவார்கள். அதேபோல் தேவராவலு இன கன்றுகளை அடையாளம் காண அவைகளுக்கு கால் மற்றும் நெற்றியில் அடையாளம் வைப்பார்கள். முதல் பட்டத்துக் காளை இறந்துவிட்டால், அதனை தெய்வீக மரியாதையோடு அடக்கம் செய்துவிட்டு, அடுத்த பட்டத்துக்காளையை தேர்வு செய்வார்கள். அதற்காக ஊர்...