முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேனி மாவட்ட ஆட்சியரின் நெகிழ வைத்த பசுமைக் காதல்!

தேனி மாவட்ட ஆட்சியரின் நெகிழ வைத்த பசுமைக் காதல்!


 


தேனி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சித் தலைவராக திருமதி. ம.பல்லவி பல்தேவ் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். அரசு திட்டங்களை மக்களின் கரங்களில் நேரடியாக சென்று சேர்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.  நீர்மேலாண்மை மீதும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
பசுமை மீது அவர் காட்டும் அக்கறை நெகிழ வைக்கிறது. நேற்றைய தினம் சுதந்திர தினத்தையொட்டி தேனி அருகே கோடாங்கிபட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நாவல் மரக்கன்றுகளை வழங்கி, நாவல் மரங்களின் பயன்களை மக்களிடம் விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே அவருடைய பரபரப்பான பணிகளுக்கு இடையே கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாய் கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் அவர் பங்கேற்று சிறப்பித்தார்.  75 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் தேனி நீர்நிலைகள் பாதுகாப்பு குழு என்ற தன்னார்வ அமைப்பால் தூர்வாரப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்படி, தேனியின் முக்கிய பிரமுகர்கள் ஒருங்கிணைந்து தன்னார்வ சேவையாக தொடங்கிய அமைப்பு இது. இந்த குழுவின் முதல் பணியாக இந்த கண்மாயை தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இப்படி ஒரு கண்மாய் இருப்பதே பலருக்கும் தெரியாத அளவுக்கு புதர்கள் மண்டிக் காணப்பட்டது. அத்தனை புதர்களையும் அகற்றி, கண்மாயை தன்னார்வலர்கள் தூர்வாரினர்.
இந்த கண்மாய் கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, வைகை அணையில் உள்ள வனவியல் கல்லூரியில் பயிற்சி பெறும் வனத்துறை பணியாளர்களை கொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நேற்று நடந்தது. ஒரே நாள் இரவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு என்பதால், வனத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் மாவட்ட வன அலுவலர் கவுதம், மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லின் துக்காரம், வனவியல் கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது.
விழாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அழைக்கலாம் என்று டாக்டர் ராஜ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து விழா குறித்த விவரத்தை தெரிவித்தார்.

 அவசரகதியில் ஏற்பாடு செய்த விழா என்ற போதிலும், ''தன்னார்வலர்களின் பெரும் முயற்சியால் தூர்வாரப்பட்ட கண்மாயில், பசுமையை பாதுகாக்க மரம் நடுவது பாராட்டுக்குரியது. நான் வந்தால் அவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்றால் நிச்சயம் வருகிறேன்' என்று நிகழ்வுக்கு வருவதாக தெரிவித்தார். காவல் கண்காணிப்பாளருக்கு பல்வேறு பணிகள் இருக்கும். பரபரப்பான பணிச்சுமைக்கும் நடுவில், தன்னார்வலர்களின் முயற்சிக்கு ஒரு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், பசுமை மீது அவர் கொண்டுள்ள அக்கறையாலும் விழாவில் பங்கேற்று அனைவரையும் ஊக்குவித்தார்.
காவல் கண்காணிப்பாளர் வருகையை போன்று, பெரும் மகிழ்வை கொடுத்தது மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் அவர்களின் வருகை. மரக்கன்று நடுவதற்காக குழிதோண்டிக் கொண்டு இருந்தபோது, ''காவல் கண்காணிப்பாளர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் வகையில் விழா ஏற்பாடு நடக்க உள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு இன்னும் இதுகுறித்த எந்த தகவலும் கொடுக்கவில்லையே'' என்ற மனஉறுத்தல் இருந்தது.
மாவட்ட ஆட்சியரை செல்போனில் அழைத்து விவரத்தை சொன்னதும், 'ரொம்ப மகிழ்ச்சியான செய்து. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்' என்றார்.
'தங்களையும் மரக்கன்று நடும் நிகழ்வுக்கு அழைக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், நேற்று இரவு தான் இப்படி ஒரு நிகழ்வை நடத்தவே திடீரென முடிவு செய்திருந்தோம். சுதந்திர தினத்தன்று, தங்களுக்கு அடுத்தடுத்து தவிர்க்க முடியாத முக்கிய பணிகள் இருக்கும் என்பதால், தங்களுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை. நீங்களும் இந்த விழாவில் பங்கேற்று இருந்தால் வெகுச்சிறப்பாக இருந்து இருக்கும்' என்றோம். ஓரிரு வினாடிகள் அமைதியாக இருந்தவர், 'விழாவை தொடங்கி விட்டீர்களா?' என்று கேட்டார். 'இல்லை, இல்லை. 3.30 மணிக்கு தான்' என்றோம். 'அப்படியா? சரிங்க நானும் வந்து விடுகிறேன்' என்றார்.

மாவட்ட ஆட்சியரின் வருகை அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாகவும், பெரும் மகிழ்வாகவும் இருந்தது. ஆட்சியர் சொன்ன 20 நிமிடங்களுக்குள் கண்மாய் கரைக்கு வந்து விட்டார். அதற்கு முன்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விட்டார். அவரிடம் மெல்லச் சென்று 'ஆட்சியரும் வருவதாக சொல்லி இருக்கிறார்' என்று சொன்னதும், 'அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி' என்று சொல்லியபடியே, அங்கே குழி தோண்டிக் கொண்டு இருந்த நண்பர்களோடு பேசத் தொடங்கினார். 'இந்த குழி பறிக்கும் எந்திரம் நல்லா இருக்கே.' 'இந்த குழியை இன்னும் கொஞ்சம் ஆழமா தோண்டுங்கப்பா... இந்த குழிக்கு அகலம் பத்தாது' என எங்களோடு களப்பணிக்கு கைகோர்த்த இளைஞராகவே மாறிவிட்டார்.
சற்று நேரத்தில் மாவட்ட ஆட்சியரும் வந்து விட்டார். முதல் மரக்கன்றை மாவட்ட ஆட்சியரை நடச் சொன்னோம். ஆனால், அவரோ அங்கிருந்த சிறுமியை அழைத்து, ''என்ன படிக்கிறீங்க... வாங்க... வாங்க... முதல் கன்றை நீங்க நடுங்க'' என்று சிறுமியை மரக்கன்று நட வைத்தார்.
'கண்மாயில் சிறப்பான பணியை மேற்கொண்டு இருக்கிறீர்கள். இப்படி ஒரு கண்மாய் இருப்பதே இப்போது தான் தெரிகிறது. களத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்' என்றார்.
  மாவட்ட ஆட்சியரை மரக்கன்று நடுங்கள் என்று கேட்டதும், தனது காலணியை கழட்டிவிட்டு, மரக்கன்றை கையில் பெற்றுக் கொண்டார். மரக்கன்றை நட்டு, தண்ணீர் ஊற்றினார். மரக்கன்று நட வேண்டும் என்றால், பகட்டுக்கு கன்றை தொட்டுக்கொடுக்கும் ஆட்சியாளர்களும் இருக்கும் நிலையில், காலனியை கலட்டி விட்டு, குழிக்குள் கன்றை இறக்கி வைத்து அதற்குள் மண்ணை நிரப்பி தண்ணீரை ஊற்றிய விதத்தை பார்க்கையில், மரங்களின் மீதும், பசுமையின் மீதும் அவர் கொண்டுள்ள காதலை உணர முடிந்தது.

தன்னார்வலர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக தகவல் அறிந்ததும் தானே களத்துக்கு வந்து நிகழ்வை சிறப்பித்தபோது, பசுமை மீதும், நீர்நிலைகள் மீதும் அவர் எவ்வளவு நேசம் கொண்டிருக்கிறார் என்பதை அறிய முடிந்தது.
மண்ணின் மீதும், மரங்களின் மீதும் காதல் கொண்ட ஆட்சியர் கிடைத்தது தேனிக்கு கிடைத்த வரம். அந்த வரத்தின் பலனை தேனி மக்கள் விரைவில் உணர்வார்கள். ஆம், மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் மாவட்டத்தில் ஏராளமான நீர்நிலைக்ள தூர்வாரப்பட்டு வருகின்றன. அரசு நிதி மட்டும் இன்றி, தன்னார்வலர்களை ஊக்குவித்தும் ஏராளமான நீர்நிலைகளை தூர்வாரி வருகிறார். மழை கொடுக்கும் பட்சத்தில், இந்த முயற்சி நல்ல பலனை கொடுக்கும்.
இந்த சிறப்பான நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் கவுதம், மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லின் துக்காரம், வனவியல் கல்லூரி முதல்வர் ராஜ்மோகன், கல்லூரி வனச்சரகர் தீக்சயாதேவி, வனவர் சாந்தகுமார் மற்றும் வனத்துறை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த மரக்கன்று நடும் நிகழ்வை இத்தனை துரிதமாக நிகழ்த்தியது என்பது, ஆசிரியர் விஜயராஜா, சகோதரர் பசுமை செந்தில், விடுதி காப்பாளர் ஆனந்தன், பள்ளப்பட்டி விவசாயி சீனிராஜ் ஆகியோர் பக்கபலமாய் இருந்ததாலேயே சாத்தியமானது. ஆசிரியர் விஜயராஜாவிடம் விவரத்தை சொன்னதும், ''குழி தோண்டும் எந்திரம் அம்மச்சியாபுரத்தில் உள்ளது. அங்கு 200 மரக்கன்றுகள் நட உள்ளோம். சரி, நான் எடுத்து வருகிறேன்'' என்று எந்திரத்தோடும், அம்மச்சியாபுரம், வாய்க்கால்பட்டி இளைஞர் படையோடும் களத்துக்கு வந்தார்.
நல்லோர் இணைந்த செயல் வெற்றியை பரிசளிக்கும் என்பார்கள். அந்த வகையில் நல்ல அதிகாரிகளும், நல்ல உள்ளங்களும் செயல்படும் தேனியில் அடுத்தடுத்து ஆரோக்கியமான நல்ல, நல்ல மாற்றங்களை காண முடியும் என்ற திடமான நம்பிக்கை உள்ளது.

பேரன்புடன்
கதிர்மாயா கண்ணன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'கோபுரத்தில் இருந்து கோட்டைக்கு குதிக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் முயற்சி' -இயக்குனர் கவுதமன் தாக்கு

கோபுரத்தில் இருந்து கோட்டைக்கு குதிக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன் முயற்சி செய்கிறார்கள் என்றும், அன்னை தெரசா போல் சேவை செய்யுங்கள் என்றும் இயக்குனர் கவுதமன் கூறினார். கவுதமன் பேட்டி திரைப்பட இயக்குனர் கவுதமன் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தேனியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்ற வாலிபர் தீக்குளித்து இறந்தார். எதற்காக அவர் உயிரை தியாகம் செய்தாரோ அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேறவில்லை. அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில், முல்லைப்பெரியாற்றில் புதியஅணை கட்டுவதற்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகம். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கும் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மத்திய அரசு தொடர்ந்து தமிழ் இனத்து...

கடவுள்களை உருவாக்க காரணமானவர்: இவரை உங்களுக்கு தெரியுமா...?

கடவுள்களை உருவா க் க காரணமானவர்:   இவரை உங்களுக்கு தெரியுமா...?       'நீங்கள், கடவுள் மாதிரி சாமி' என்ற வார்த்தைகள் கோவில்களை விட, மருத்துவமனைகளிலும், நீதிமன்றங்களிலும் தான் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. அதேபோல் நன்மை செய்யும் சான்றோர்களின் நற்செயல்களால் பயன்பெற்றவர்கள் வணங்கும் போதும் இந்த வார்த்தையை உச்சரிப்பது உண்டு.     நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி      கடவுள்கள் நேரில் வந்து யாருக்கும் உதவுவது இல்லை. நல்ல மனிதர்களே கடவுள்களாக உருவெடுக்கின்றனர். அந்த வகையில் எண்ணற்ற கடவுள்கள் உருவாக அடித்தளமிட்ட மகானை பற்றி அறிவோம். வாருங்கள்... தேனி நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளிக்கு இது நூற்றாண்டு விழா. பிப்ரவரி 14-ந்தேதி தொடங்கி, 17-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விழா நடக்கிறது. ஒரு கல்வி நிலையம் தொடக்கத்தில் இருந்தே பெருமைக்குரியதாக விளங்கி நூற்றாண்டை தொடுவது என்பது அத்தனை சாதாரணமானது அல்ல.     ஏழை, எளிய மக்கள்  கல்வி மறுக்கப்பட்ட கால கட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது என்பது போர்க்களத்தி...

பவனி வரும் பட்டத்துக் காளை! அதிசய சம்பிரதாயங்களும்.. அபூர்வ பழக்கங்களும்..

தே னி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழுவத்தில் 400 மாடுகள் உள்ளன. அவைகளுக்கு தலைவனாக விளங்குவது பட்டத்துக்காளை. அதனை தேர்வு செய்யும் நடைமுறை சுவாரஸ்யமானது. வரலாற்று தொடர்பும் கொண்டது. தேவராவலு என்ற இனத்தை சேர்ந்த காளையே பட்டத்துக்காளையாக தேர்வு செய்யப்படுகிறது. தேவர்+ ஆவலு என்று இதை பிரித்து பொருள் கொள்கிறார்கள். ‘ஆவலு’ என்பது பசுவை குறிக்கிறது. தேவராவலு என்றால் தேவர்களின் பசு என்று பொருள். அந்த வகை பசுக்கள் ஈன்ற கன்றுகளில் இருந்தே பட்டத்துக் காளை தேர்வு செய்யப்படுகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் தானமாகவும் காளைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவை பட்டத்துக் காளைக்கான போட்டியில் இடம்பெற முடியாது. அதனால் அவைகளை அடையாளம் காண, தானமாக கொடுக்கப்படும் மாடுகளின் காதின் ஒரு பக்கம் குறியிடுவார்கள். அதேபோல் தேவராவலு இன கன்றுகளை அடையாளம் காண அவைகளுக்கு கால் மற்றும் நெற்றியில் அடையாளம் வைப்பார்கள். முதல் பட்டத்துக் காளை இறந்துவிட்டால், அதனை தெய்வீக மரியாதையோடு அடக்கம் செய்துவிட்டு, அடுத்த பட்டத்துக்காளையை தேர்வு செய்வார்கள். அதற்காக ஊர்...